விருப்ப மனு பெறும் கூட்டத்தில் பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு அடி-உதை

விருப்ப மனு பெறும் கூட்டத்தில் பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு அடி-உதை விழுந்தது.

Update: 2021-09-16 00:23 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதற்காக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில நிர்வாகிகள் பாஸ்கர், ராஜதேவன், ரகுராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பா.ஜ.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுவை பெற்று கொண்டார்.

அதன் பின்னர் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.

அப்போது பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணி நிர்வாகியை திடீரென ஆண் நிர்வாகி ஒருவர் சரமாரியாக கைகளால் தாக்கினார். இதனால் அவர் கதறி அழுது கொண்டிருந்தார். இதனை கவனித்த வானதி சீனிவாசன் உடனடியாக நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதை நிறுத்தி விட்டு, மாவட்ட தலைவர் பலராமனை அழைத்து இந்த பிரச்சினையை சரிசெய்யும் படி கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் பேசியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை மாநில நிர்வாகிகள் ஆய்வு செய்து அதன் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

கூட்டணி பற்றி கட்சியின் மாநில தலைமை முடிவு செய்து அறிவிக்கும், தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, பா.ம.க. உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்காக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா என்பதை பற்றி பா.ம.க. தான் தெளிவுபடுத்த வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகள் மோகன், முரளி, ரத்தினம், தனசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்