கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,200 கனஅடியாக கிருஷ்ணா நீர் குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,200 கனஅடியாக கிருஷ்ணா நீர் குறைக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த ஏரிகளில் 80 சதவீதத்துக்கும் மேலாக தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உபரி நீரை கடலுக்கு திறந்து விடுவது வழக்கம். தற்போது ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினர். கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இந்த ஏரியில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.65 அடியாக பதிவானது. 2.715 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 641 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அதேபோல் மழைநீர் வினாடிக்கு 63 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 327 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 270 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நேற்று வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 4.909 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.