புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தயார் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
புதிய கல்வி கொள்கை குறித்து திறந்த மனதுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
தேசிய கல்வி கொள்கை
என்ஜினீயர்கள் தினத்தையொட்டி பெங்களூரு கே.ஆர்.சர்க்கிளில் உள்ள சர்.எம்.விஸ்வேசுவரய்யா சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இளம் சமுதாயத்தினரை போட்டி உலகத்திற்கு தயாராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளது. அதை நாங்கள் நடப்பு ஆண்டில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கல்வித்துறை நிபுணர்கள், வேந்தர்கள், துணைவேந்தர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே இந்த கல்வி கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விவாதிக்க தயார்
இந்த கல்வி கொள்கை குறித்து சிலர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். அதனால் பெற்றோரோ அல்லது மாணவர்களோ ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. யாருக்காவது குழப்பம் இருந்தால், புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப கல்வி திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம். இவற்றை கவனத்தில் கொண்டே புதிய கல்வி கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பள்ளி கல்வித்துறையில் இந்த புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும். நவீன இந்தியாவின் சிற்பி சர்.எம்.விஸ்வேசுவரய்யா. அவர் கல்வி, என்ஜினீயரிங், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவினார். அவரது பிறந்தநாளை கொண்டாடினால் போதாது. அவர் வகுத்து கொடுத்த பாதையில் நாம் நடக்க வேண்டும். அப்போது தான் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
மாணவர் அமைப்பினர் போராட்டம்
தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து பெங்களூருவில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் தேசிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தயார் என்று முதல்-மந்திரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.