வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது

வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

Update: 2021-09-15 22:00 GMT
ஈரோடு
வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. 
மறுசீரமைப்பு
வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-
பெரும்பாலான பகுதியில் இறந்தவர்கள் பெயர், வடமாநிலத்துக்கு நிரந்தரமாக சென்றவர்கள் பெயர்கள் கூட நீக்கப்படவில்லை. தெரு, வாக்குச்சாவடி, தொகுதி, மாநிலம் என மாறியவர்களின் பெயர்கள் நீக்கம் செய்தல் படிவம் வழங்கியும் இதுவரை அவற்றை சரி செய்யவில்லை. அவ்வாறு நீக்கம் செய்தாலே, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குறைவார்கள். 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியை இரண்டாக பிரிப்பதுடன், படிவம் வழங்கியவர்கள் பெயர்களை நீக்கம் செய்து, அதன்பின் வாக்குச்சாவடி பிரித்தால் சிறப்பாக இருக்கும். வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவதுடன், பெயர் நீக்கம், சேர்த்தல் போன்றவைகளை நேரடியாக செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வாக்காளர் பட்டியல்
அதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர் இருந்தால், அதனை இரண்டாக பிரித்துள்ளோம். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்பு, 237 வாக்குச்சாவடி இருந்தது. அதில், காமராஜ் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஒரு வாக்குச்சாவடியில், 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதால், அதனை இரண்டாக பிரித்துள்ளோம். தற்போது, 238 வாக்குச்சாவடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
வருகிற நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அப்போது வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், வீடுவீடாக சென்று பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பிரேமலதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்