ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை
ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மாநில சுற்றுலா துறை கூடுதல் செயலாளர் அறிவித்துள்ளார்.
சிவமொக்கா:
ஜோக் நீர்வீழ்ச்சி
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் பிரசித்திபெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாநில அரசு தடை விதித்தது. அதேபோல் ஜோக் நீர்வீழ்ச்சிக்கும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வர மாநில அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. அதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்பதாகும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளை அங்கிருந்த பாதுகாவலர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதித்து இருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி 4 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் ஜோக் நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநில சுற்றுலா துறை கூடுதல் செயலாளர் ராமகிருஷ்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜோக் நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை. இருப்பினும் அவர்கள் முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். ஜோக் நீர்வீழ்ச்சியை காணவரும்போது முதலாவது நுழைவு வாயிலில் உள்ள அதிகாரிகளிடம் முதலாவது டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டாயம் ஆகும்.
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஜோக் நீர்வீழ்ச்சியின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விரைவில் சிறப்புக்கூட்டம் நடத்தி, அடுத்த ஆண்டுக்குள் முழுமையான அளவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.