மைனர் பெண் கூட்டு பலாத்காரம்; 2 வாலிபர்கள் கைது
கடூர் அருகே மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைதாகி உள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு:
ஆடை மாற்றும்போது...
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்டணா கிராமத்தில் 17 வயது மைனர் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண், தனது வீட்டில் துணி மாற்றி கொண்டிருந்தார். அப்போது அதேகிராமத்தை சேர்ந்த அனில் நாயக்(வயது 23) என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பெண், ஆடை மாற்றுவதை பார்த்துள்ளார்.
மேலும் அந்த பெண் ஆடை மாற்றுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அனில்நாயக், பெண்ணிடம் சென்று என்னிடம் உனது ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன பெண், சம்மதம் தெரிவித்தார்.
கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அனில்நாயக், அதேபகுதியில் உள்ள தனது நண்பன் பாலா நாயக் வீட்டிற்கு மைனர் பெண்ணை அழைத்து சென்று கற்பழித்துள்ளார். அப்போது மைனர் பெண் கற்பழிக்கப்பட்ட வீடியோவை பாலா நாயக் செல்போனில் படம் பிடித்தார். இதையடுத்து அவரும், அவரது நண்பர்கள் மேலும் 2 பேரும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மைனர் பெண்ணை கற்பழித்துள்ளனர். அதாவது கடந்த 2 மாதமாக மைனர் பெண்ணை மிரட்டி அனில்நாயக் உள்பட 4 பேரும் கூட்டாக கற்பழித்து வந்துள்ளனர்.
மேலும் மைனர் பெண், வெளியில் நடந்து செல்லும்போதெல்லாம் ஆபாச வீடியோ தொடர்பாக 4 பேரும் கேலிகிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மைனர் பெண் சொல்லொண்ணா துயருக்கு ஆளானார்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சக்கராயப்பட்டணா கிராமத்தில் வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் மைனர் பெண், அவரது சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர். அப்போதும் மைனர் பெண்ணை, அனில்நாயக், பாலா நாயக் உள்பட 4 பேரும் கேலிகிண்டல் செய்துள்ளனர். மேலும் தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்த பெண், நடந்த விஷயங்களை சித்தப்பாவிடம் கூறி கதறி அழுதார்.
இதைகேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக சக்கராயப்பட்டணா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மைனர் பெண் ஆடை மாற்றுவது, கற்பழிக்கப்பட்ட வீடியோவை காட்டி 2 மாதமாக அனில்நாயக், பாலாநாயக் உள்பட 4 பேரும் கூட்டாக கற்பழித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கூட்டாக கற்பழித்த அனில் நாயக், பாலாநாயக் ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
சம்பவம் அறிந்து 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை மீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலபாதுகாப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சக்கராயபட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.