தாயை கான்ற வாலிபர் கைது

பெற்ற தாயை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் மனநலம் பாதித்தவர், இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2021-09-15 21:43 GMT
கும்பகோணம்;
பெற்ற தாயை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் மனநலம் பாதித்தவர், இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். 
கும்பகோணத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
விபத்தில் மனநலம் பாதிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாத்தி ரம்யா நகரில் வசித்து வந்தவர் சந்திரசேகர் மனைவி சரஸ்வதி(வயது 70). இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள். இதில் 5 மகள்கள், 1 மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. இவர்கள் அனைவரும் தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர்.  கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு சந்திரசேகர் இறந்து விட்டார். இவர்களது கடைசி மகன் பழனி(35). இவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் தலையில் அடிபட்ட நிலையில் பழனி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
இதற்காக பழனி தஞ்சை மருத்துவமனைக்கு சென்று சிசிச்சை பெற்று வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டதால் பழனி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சரஸ்வதியும், பழனியும் தனியாக வசித்து வந்தனர்.
தாய்-மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சரஸ்வதி தூங்க சென்று விட்டார். அப்போது பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் விடியும் வரை வீட்டிலேயே தூங்கியுள்ளார்.
கைது 
நேற்று காலை நீண்ட நேரமாகியும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் சரஸ்வதியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் பழனி அதே பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டிற்கு சென்று தான், தனது தாயை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் பழனியை பிடித்து பட்டீஸ்வரம் போலீசில் ஒப்படைத்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பழனியை போலீசார் கைது செய்தனர்.  
கும்பகோணம் பகுதியில் பெற்ற தாயை மகனே கொன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்