மர வியாபாரி வெட்டிக்கொலை
களக்காடு அருகே, சொத்துத்தகராறில் மர வியாபாரியை வெட்டிக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே, சொத்துத்தகராறில் மர வியாபாரியை வெட்டிக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
மர வியாபாரி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 82), மர வியாபாரி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
பொன்னுத்துரையின் மகள் செல்லமணி. இவருக்கும், பொன்னுத்துரையின் தங்கை மகனான அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் கிருஷ்ணனுக்கும் (58) திருமணம் நடந்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னுத்துரைக்கும், அவரது மருமகன் கிருஷ்ணனுக்கும் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் பொன்னுத்துரை, கிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார். இதில் கிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வெட்டிக் கொலை
இதற்கிடையே, பொன்னுத்துரையின் மனைவி பார்வதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் பொன்னுத்துரை தனது மகள் செல்லமணி வீட்டில் இருந்து வந்தார். ஆனாலும் பொன்னுத்துரைக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பொன்னுத்துரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுத்துரையை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
மருமகன் கைது
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ணனை பிடித்து கைது செய்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.