குளித்தலை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல்

குளித்தலை போலீஸ் நிலையம் முன்பு தேவேந்திரகுல மக்கள் இயக்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-15 19:33 GMT
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவிஸ் (வயது 29). இவர் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரும் இவரது ஊரைச் சேர்ந்தவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தியாகி இமானுவேலின் குருபூஜைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு கடந்த 11-ந் தேதி காரில் வந்துகொண்டிருந்தனர். குளித்தலை அருகேயுள்ள குட்டப்பட்டி நான்கு ரோடு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கீழகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சங்கர், குஞ்சால் என்கிற சங்கர், கருவாடு என்கிற கலைமணி ஆகிய 4 பேரும் நவிைஸ சாதி பேர் சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நவிஸ் குளித்தலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் உள்பட 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் நவீஸை திட்டி கொலை மிரட்டல் விடுத்த தமிழ்செல்வன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்யாததை கண்டித்து தேவேந்திரகுல மக்கள் இயக்க மாநில செயலாளர் சக்திவேல் தலைமையிலான நிர்வாகிகள் குளித்தலை போலீஸ் நிலையம் முன்பு நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்