மேலும் ஒரு வாலிபர் கொடூரக்கொலை
நெல்லை அருகே பழிக்குப்பழியாக மேலும் ஒரு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் அவரது தலையை துண்டித்து தொழிலாளி கொலையான இடத்தில் வீசிச்சென்று உள்ளனர்.
நெல்லை:
நெல்லை அருகே பழிக்குப்பழியாக மேலும் ஒரு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் அவரது தலையை துண்டித்து தொழிலாளி கொலையான இடத்தில் வீசிச்சென்று உள்ளனர்.
தொழிலாளி கொலை
நெல்லை அருகே கீழசெவல் நயினார்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல் சங்கரசுப்பிரமணியனின் தலையை கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்துவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். சங்கர சுப்பிரமணியன் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக....
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பழிக்குப்பழியாக தலையை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தை அடுத்த பிராஞ்சேரி செங்குளம் காலனி குளத்துக்கரை பகுதியில் நேற்று காலை தலை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர்.
டி.ஐ.ஜி. விசாரணை
நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தவாறே அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
விவசாயி
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37) என்பதும், இவர் விவசாயி என்பதும் தெரியவந்தது.
நேற்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் செங்குளம் காலனி குளத்துக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் மாரியப்பனை வழிமறித்து அவரது இடது காலை அரிவாளால் வெட்டித்துண்டித்து உள்ளனர். பின்னர் அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். உடலை அங்கேயே போட்டு விட்டு தலையை எடுத்து சென்று விட்டனர். மாரியப்பனின் தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
தனிப்படைகள்
அப்போது அவரது தலை சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 2014-ம் ஆண்டு கோபாலசமுத்திரம் வடக்கூரை சேர்ந்த கணேசன் என்ற கார்த்திக் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், மாரியப்பனின் தலையை மர்மநபர்கள் சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசி சென்று இருப்பதால் அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மாரியப்பன் கொலையில் துப்பு துலக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பதற்றம்-போலீஸ் குவிப்பு
அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோபாலசமுத்திரம் ஊருக்குள் செல்லும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.