போலீசாரை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். திருப்பத்தூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

பொதுமக்கள், போலீசாரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-15 19:18 GMT
திருப்பத்தூர்

பொதுமக்கள், போலீசாரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

பொறுப்பேற்பு 

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சென்னையில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

திருப்பத்தூர் மாவட்டம் கிராம பகுதிகள் நிறைந்ததாகும்.  கிராம பகுதி மக்களுக்கு போலீஸ் என்றாலே ஒரு அச்சம் உள்ளது. அந்த அச்சத்தைப் போக்க காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கிராமப்பகுதி மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் போலீசாரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
போலீஸ் என்ற பயம், அச்சம் இருக்க தேவையில்லை. பொதுமக்கள் தங்களது உறவினர்கள் போல போலீசாரிடம் பழகி தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். புகார் கொடுக்கும் பொதுமக்கள் மீது போலீசார் கனிவாகப் பேசி புகார்களை பெற்று அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 24 மணிநேரமும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

குண்டர் சட்டம்

பொதுமக்கள் தங்களது பகுதியில் நடக்கும் குற்றசம்பவங்கள், குறைகள், புகார்களை எந்த நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். கஞ்சா வியாபாரிகள், பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் யார் என கண்டறியப்பட்டு தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
திருப்பத்தூர் பகுதியில் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலை புதூர் நாடு பகுதியில் திறக்கப்படாமல் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்