சென்னை பெரம்பூரில் ரெயிலில் அடிபட்டு இறந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் அரக்கோணம் வந்த ரெயில்

சென்னை பெரம்பூரில் ரெயிலில் அடிபட்டு இறந்தவரின் தலை என்ஜினில் சிக்கியவாறு வந்த நிலையில் அரக்கோணத்தில் மீட்கப்பட்டது;

Update: 2021-09-15 18:50 GMT
அரக்கோணம்

சென்னை பெரம்பூரில் ரெயிலில் அடிபட்டு இறந்தவரின் தலை என்ஜினில் சிக்கியவாறு வந்த நிலையில் அரக்கோணத்தில் மீட்கப்பட்டது

எக்ஸ்பிரஸ் ரெயில்

அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து சென்னை, காட்பாடி வழியாக பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ரெயில் என்ஜின் டிரைவர், பராமரிப்புக்காக இறங்கி என்ஜினின் முன் பகுதிக்கு வந்தார். 

அப்போது ஆண் ஒருவரின் தலை மட்டும் ரெயில் என்ஜினில் சிக்கி இருந்ததை கண்டு அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ரெயில்வே போலீசார் என்ஜினில் சிக்கியிருந்த தலையை மீட்டனர். 

பின்னர் விசாரணை நடத்திய போது சென்னை பெரம்பூரை சார்ந்த பிரபு (வயது 50) என்பதும் அப்பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த போது ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி தலை மட்டும் ரெயில் என்ஜினில் சிக்கி இருந்தும் தெரிய வந்தது. 

ஒப்படைப்பு

இ்து குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் மீட்கப்பட்ட தலை ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூருக்கும் அரக்கோணத்திற்கும் இடையே உள்ள தூரம் 80 கிலோ மீட்டர் வரை இருக்கும். துண்டிக்கப்பட்ட தலை என்ஜினில் சிக்கி 80 கிலோ மீட்டர் தூரம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்