‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

காட்பாடியில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-15 18:27 GMT
காட்பாடி

காட்பாடியில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;

‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. கூலித்தொழிலாளி. அவரது மனைவி ருக்மணி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள். இதில் 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் சவுந்தர்யா (வயது 17).

 இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் 510 மதிப்பெண் எடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த பிறகு வீட்டுக்கு வந்த மாணவி தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக அவரது தாய் ருக்மணியிடம் கூறியுள்ளார்.

 மேலும் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் மாணவிக்கு ஆறுதல் கூறி உள்ளனர். ஆனாலும் மாணவி சவுந்தர்யா மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலையில் திருநாவுக்கரசு, ருக்மணி இருவரும் வெளியே சென்றிருந்தனர். சவுந்தர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நீட் தேர்வில் வெற்றி பெற மாட்டோம் என்ற பயத்தில் இருந்த மாணவி சவுந்தர்யா வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்