ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்படுமா?
இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்வதில் சிரமம் இருப்பதால், ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டியில் இந்திரா காலனி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்திராகாலனி குடியிருப்புக்கும், சி.அம்மாபட்டிக்கும் இடையே 1988-ஆம் ஆண்டு ெரயில்வே பாதை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலைக்கு இந்திராகாலனி மக்கள் தள்ளப்பட்டனர்.
குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும்போதும் தண்டவாளத்தை கடந்தே செல்கிறார்கள். எனவே ரயில்வே துறை சார்பில் அங்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக அவர்கள் பல்வேறு போராட்டத்தை நடத்தி விட்டனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார்.
இதனையடுத்து அவரது உடலை மிகுந்த சிரமத்துக்கு இடையே ரெயில்வே தண்டவாளம் வழியாக இந்திராகாலனி மக்கள் தூக்கி சென்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர்.