கன்னிவாடி:
கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுரக்காய்பட்டி பகுதியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராம மக்கள் வேலை செய்து வருகின்றனர்.
அதில் பணி பொறுப்பாளராக உள்ள பெண்ணை, ஊராட்சி நிர்வாகி ஒருவர் நேற்று முன்தினம் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பணி பொறுப்பாளர் மற்றும் கிராம மக்கள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். செம்பட்டி-பழனி சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மறியல் நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா ஆகியோர் அங்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.