பழையாறு மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடத்தை சீரமைக்க வேண்டும்

பழுதடைந்த பழையாறு மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-15 17:37 GMT
கொள்ளிடம்:
பழுதடைந்த பழையாறு மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பழையாறு மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் இயற்கை மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8000 மீனவர்கள் 350 விசைப்படகுகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி  வரை வர்த்தகம் நடைபெறும் இந்த துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. 
பழுதடைந்த மீன்பிடி ஏலக்கூடம் 
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பழையாறு துறைமுகத்தில் உள்ள மீன் ஏலக்கூடம் பழுதடைந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்ட 8 டன் கொள்ளளவு கொண்ட மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கும் முற்றிலும் சேதமடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது.  இதனால் ஒவ்வொரு மீனவரும் தனியாக மீன்களை பதப்படுத்த சாதாரண பெட்டிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விலைஉயர்ந்த மீன்களை கூட சேமித்து வைக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
புதிய மீன்சேமிப்பு குளிர்சாதன கிடங்கு
அதே போல் ஏலக்கூடம் பராமரிப்பு இல்லாததால் துறைமுக வளாகத்திலேயே மீன்களை ஏலம் விட்டு விற்பனை செய்கின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பழையாறு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தை சீரமைத்தும், புதிய மீன் சேமிப்பு குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டும் எனவும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்