கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு
இடைத்தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
இடைத்தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது. இதை தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மாலை 5 மணி வரை...
இதேபோன்று வடக்கு, ஆனைமலை ஒன்றியங்களில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஒன்றியங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் காலியாக உள்ள தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், வடக்கு ஒன்றியத்தில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும்,
ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். இதை தவிர மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடைசி நாள்
15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடுமுறை இல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
23-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 25-ந்தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 12-ந்தேதி அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.