பள்ளியில் அதிக கட்டணம் கேட்பதாக புகார்; முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக தேனி கோர்ட்டு உத்தரவு

தனியார் பள்ளியில் அதிக கட்டணம் கேட்பதாக எழுந்த புகார் தொடர்பாக தக்க ஆவணங்களுடன் முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2021-09-15 17:21 GMT
தேனி:
தனியார் பள்ளியில் அதிக கட்டணம் கேட்பதாக எழுந்த புகார் தொடர்பாக தக்க ஆவணங்களுடன் முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிக கட்டணம்
தேனி ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் சிவகுமரன். இவர் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "எனது மகன் வைபவ் முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறான். அந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் கேட்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் செய்தேன். கட்டண நிர்ணய அறிவிப்பை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டச் சொல்வதாக கல்வி அதிகாரி கூறினார். ஆனால், பள்ளி நிர்வாகம் அதிக கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்கிறது. எனவே, பள்ளி மீதும், கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி முகமது ஜியாவுதீன் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் கடந்த மாதம் 26-ந்தேதி பள்ளியின் சார்பில் கணக்காளர் ரமேஷ் என்பவர் ஆஜரானார். அவர், ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பள்ளி முதல்வர் ஆஜராகவும், அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நேரில் ஆஜராக வேண்டும்
அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், பள்ளி சார்பில் யாரும் ஆஜராகவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தால் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் பள்ளி முதல்வரோ அல்லது பொறுப்புள்ள நபர்களோ அரசு நிர்ணயித்த கட்டணம் குறித்த ஆவணங்களுடன் வருகிற 29-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அதே நாளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தக்க ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை சம்பந்தப்பட்ட மாணவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் நீதிபதி முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்