கிணத்துக்கடவு, வால்பாறையில் 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதி

கிணத்துக்கடவு, வால்பாறையில் 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Update: 2021-09-15 17:15 GMT
கிணத்துக்கடவு,

கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 1,610 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கிணத்துக்கடவு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டது. 

இதையடுத்து அந்த மாணவி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கிணத்துக்கடவு அரசு பள்ளிக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் திலீப் குமார், கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகரன், ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் சென்று மாணவி அமர்ந்து படித்த வகுப்பறையில் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டனர்.

மேலும் அந்த வகுப்பில் இருந்து படித்த அனைவரும் மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டு, அந்த வகுப்பறை மட்டும் பூட்டப்பட்டது. ஒரு வாரம் அந்த வகுப்பறையை மூடி வைக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர். தற்போது அந்த மாணவியுடன் வகுப்பறையில் இருந்த 37 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதேபோன்று வால்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிக்கு தொற்று உறுதியானது. அவருக்கு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்