லோயர்கேம்ப்பில் புதர்மண்டி கிடக்கும் பென்னிகுவிக் மணிமண்டபம்
லோயர்கேம்ப்பில் பென்னிகுவிக் மணிமண்டபம் புதர்மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர், கர்னல் ஜான் பென்னிகுவிக். இவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளும், தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வருகை தருகின்றனர்.
மேலும் கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான தேக்கடிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தை பார்வையிட்டு செல்கின்றனர். மணிமண்டபத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் வரைபடங்கள், அணையின் மாதிரி வடிவமைப்பு மற்றும் லோயர்கேம்ப்பில் நிலவும் இயற்கை சூழலையும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. சுற்றுலா பயணிகளும் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பராமரிப்பு பணியும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மணிமண்டப வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் முதல் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் மணிமண்டபத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள், அங்கு புதர்மண்டி கிடப்பதை பார்த்து வேதனை அடைந்தனர். எனவே பென்னிகுவிக் மணிமண்டப வளாகத்தில் வளர்ந்்துள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.