தக்காளி விலை கடும் வீழ்ச்சி செடிகளில் அழுகி வீணாகும் அவலம்
விலை கடும் வீழ்ச்சியால் தக்காளி செடிகளில் அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தின்னக்கழனி, மலைசந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் கிலோ ரூ.50 வரை விற்பனை ஆன தக்காளி, சில வாரங்களாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கிலோ 7 ரூபாய்க்கும் கீழே விற்பனை ஆகிறது.
இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் தக்காளியை பறிக்காமல் செடிகளிேலயே விவசாயிகள் விட்டுள்ளனர். இதனால் தக்காளி செடிகளில் அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. செடிகளில் பழுத்து கிடக்கும் தக்காளியை அறுவடை செய்வதற்கான கூலி கூட கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே அப்படியே விட்டு விடுகிறோம். இதனால் செடிகளில் தக்காளி அழுகி வீணாகிறது. சில இடங்களில் கால்நடைகளை மேய விடும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.