தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு முறைகேட்டை கண்டித்து மாணவ மாணவிகள் பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நல்லம்பள்ளி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு முறைகேட்டை கண்டித்து மாணவ-மாணவிகள் பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது கலந்தாய்வு
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 2021-ம் ஆண்டிற்கான 22 துறைகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அறிவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைக்கான பொது கலந்தாய்வில், விண்ணப்பித்த தர்மபுரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வில் மாணவர்களுக்கு துறையை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. இதை கண்டித்தும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு கலைக்கல்லூரி வளாகத்திலேயே கலந்தாய்வுக்கு வந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவதுடன், இந்த பொது கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு விதிமுறைப்படி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்து தகுதியான மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே துறை படிப்பை ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென அவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.