தனியார் செல்போன் நிறுவன கோபுரம் அமைப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

மர்ம நபருக்கு வலைவீச்சு

Update: 2021-09-15 16:33 GMT
விழுப்புரம், 
விக்கிரவாண்டி தாலுகா சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரை கடந்த 20.9.2020 அன்று அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இதற்காக முன்பணமாக ரூ.25 லட்சமும், மாத வாடகை தொகையாக ரூ.30 ஆயிரம் பெற்றுத்தருவதாகவும், அதற்கு நீங்கள் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய மணிகண்டன், அந்த நபர் கூறியபடி 24.9.2020 அன்று முதல் 1.10.2020 வரை 6 தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 1,500-ஐ அந்நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் இதுநாள் வரையிலும் மணிகண்டனுக்கு எந்த பணமும் வழங்காமல் அந்த நபர் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை ஏமாற்றிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்