மாவட்டத்தில் 40 ஊராட்சி குளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீன் வளர்க்க நடவடிக்கை

மாவட்டத்தில் 40 ஊராட்சி குளங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்

Update: 2021-09-14 17:23 GMT
கள்ளக்குறிச்சி

முருகன் கோவில் குளம்

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் குளத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வளர்ப்புக்காக கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை மற்றும் புல் கெண்டை ஆகிய ரகங்களை சேர்ந்த 2 ஆயிரத்தி 500 மீன் குஞ்சுகளை கலெக்டர் ஸ்ரீதர் கோவில் குளத்தில் விட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

வாழ்வாதாரத்தை மேம்படுத்த

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பிற துறைகளுடன் இணைந்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் அங்கமாக கள்ளக்குறிச்சி தாலுக்கா இந்திலி ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் குளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மீன்வளர்த்துறை இணைந்து தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்தி 500 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. மேலும் இந்திலி ஊராட்சியைச் சேர்ந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு மீன் ரகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

50 ஆயிரம் மீன் குஞ்சுகள்

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 2021-ன் கீழ் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான குளங்களில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் வீதம் 10 ஹெக்டேர் பரப்பளவில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 40 ஊராட்சி குளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக இந்திலி முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. எனவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மீன் குஞ்சுகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து மீன்வளத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு மீன்வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மீன்வளத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் உதவித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்