அரசு பெண் ஊழியரை தாக்கி 5½ பவுன் நகை பறிப்பு

பளுகல் அருகே அரசு பெண் ஊழியரை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-09-12 21:10 GMT
களியக்காவிளை:
பளுகல் அருகே அரசு பெண் ஊழியரை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரசு பெண்ஊழியர்
பளுகல் அருகே உள்ள மேல்பாலை நிலவாணிவிளையை சேர்ந்தவர் பத்ரோஸ். ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவருடைய மனைவி ஸ்டெல்லா பாய் (வயது 54). விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 
இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் பால் வாங்குவதற்காக சென்றார். 
நகை பறிப்பு
அப்போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். திடீரென அந்த நபர்கள், ஸ்டெல்லாபாய் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லாபாய் சுதாரித்துக் கொண்டு நகையை பறிக்க விடாமல் போராடினார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ஸ்டெல்லாபாயை தாக்கி நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். 
இதுகுறித்து ஸ்டெல்லாபாய் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்