கடலூர் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை கரைக்க திடீர் தடை

கடலூர் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை கரைக்க பொதுமக்களுக்கு போலீசார் திடீரென தடை விதித்ததால், அவர்கள் உப்பனாற்றில் கரைத்து விட்டு சென்றனர்.;

Update: 2021-09-12 19:35 GMT
கடலூர், 

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வீடுகளில் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

இந்நிலையில் சிலைகள் வைத்து 3-வது நாள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம், அதன்படி நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைத்தனர். அதன்படி கடலூர் நகர மக்கள் கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விநாயகர் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

திடீர் தடை

அதாவது தனிநபர்கள் தங்கள் வீடுகளில் வைத்த விநாயகர் சிலைகளை சில்வர் பீச்சில் கரைக்கலாம் என்று போலீசார் அறிவித்து இருந்தனர். ஆனால் நேற்று பொதுமக்கள் சிலைகளை கரைக்க சென்ற போது, சில்வர் பீச்சுக்கு செல்ல போலீசார் திடீரென தடை விதித்தனர். மாறாக உப்பனாறு பாலம் அருகே தடுப்பு கட்டைகள் வைத்து பொதுமக்கள், வாகனங்கள் செல்லாதபடி அடைத்தனர்.

பின்னர் அங்கு சென்ற பொதுமக்களிடம் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால். உப்பனாற்றிலேயே விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வேறுவழியின்றி உப்பனாறு கரையோரம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் உப்பனாற்றில் விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.

சிலைகள் கரைப்பு

ஆனால் உப்பனாறு கரையோரம், செடி, கொடிகள் முளைத்தும், அசுத்தமாகவும் இருந்தது. இதனால் இந்த இடத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வைத்து விட்டார்களே? என்று பொதுமக்கள் முணு, முணுத்தபடி சென்றதையும் பார்க்க முடிந்தது. அதேவேளையில் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கடற்கரையோர பகுதி மக்கள் அருகில் உள்ள கடலில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

இதேபோல் கடலூர் கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளிலும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து, சிலைகளை கரைத்து விட்டுசென்றனர். பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, கிள்ளை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

ஒரு சிலர் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கோவில்களில் வைத்தனர். அந்த சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் மொத்தமாக எடுத்துச்சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்