திருவண்ணாமலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல்
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களை தடுப்பூசி போட்டு கொள்ளவதற்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை பாராட்டினார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் கலெக்டர் பிரதாப், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசனை சேர்ந்த பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.