கரும்பு தோட்டத்தில் தீ

கரும்பு தோட்டத்தில் தீ

Update: 2021-09-12 18:12 GMT
முத்தூர், 
 முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னாபுரம், வெட்டுக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சிவசெல்வகுமார் (வயது 42). விவசாயி. இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 1.40 மணிக்கு சாகுபடி செய்யப்பட்டு 90 நாட்கள் மட்டுமே ஆன இவரது கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென்று வேகமாக கரும்பு காடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த சிவசெல்வகுமார் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து வந்து  தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுபற்றிய தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்  சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர்.ஆனாலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான  கரும்பு பயிர்களும், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான  சொட்டு நீர் பாசன குழாய்களும்  எரிந்து கருகி சாம்பலாகின. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்