நாமக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வை 3,736 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 6 மையங்களில் நீட் தேர்வை 3,736 மாணவ, மாணவிகள் எழுதினர்.
நாமக்கல்:
நீட் தேர்வு
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2021-2022-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நேற்று நடைபெற்றது.
இந்த தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பாவை என்ஜினீயரிங் கல்லூரி, தி ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி, பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரி, கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமி, தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி என 6 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த மையங்களில் தேர்வு எழுத 3,853 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 3,736 பேர் தேர்வு எழுதியதாகவும், மீதமுள்ள 117 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை அலுவலர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளின் வருகை சதவீதம் 96.96 ஆகும்.
முககவசம்
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினாலும், காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு மாணவ, மாணவிகள் வர தொடங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் கண்டிப்பாக மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிக அளவில் விதிக்கப்பட்டு இருந்தன. தீவிர சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கை கடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், மாணவிகள் துப்பட்டா அணியவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் சில மாணவிகள் தாங்கள் அணிந்து வந்திருந்த நகைகள் மற்றும் துப்பட்டாவை அவசர, அவசரமாக கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதுவரை மாணவ, மாணவிகளுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் அருகே காத்திருந்தனர். சில மையங்களில் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லாததால் கடும் அவதி அடைந்தனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை 11 மணிக்கே மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதிய உணவு அருந்தாமல், பட்டினியுடன் தேர்வு எழுத நேரிட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமி மையத்தில் நடந்த நீட் தேர்வை 540 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.