நகைகளை திருடிய 2 பெண்கள் கைது
பஸ்சில் பயணிகளிடம் நகைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
பஸ்சில் பயணிகளிடம் நகைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நகை மாயம்
திருவாடானையை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவர் தனது பேத்தியை காரைக்குடியில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக காரைக்குடிக்கு வந்தார்.
பின்னர் திருவாடானை செல்ல காரைக்குடி பஸ் நிலையதிற்கு பஸ்சில் வந்தார். அப்போது அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.
சிவகங்கையை சேர்ந்தவர் சாந்தி (40). இவர் தனது பழைய தங்க நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்குவதற்காக காரைக்குடி வந்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர் வைத்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அரியக்குடியை சேர்ந்தவர் லட்சுமி ஆட்சி (75) தேவ கோட்டையில் உள்ள உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென் றார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இறங்கும்போது பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3¾ பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை.
2 பேர் கைது
இது குறித்த புகார்களின்பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சுகுணா (வயது 35), அகிலாண்டேஸ்வரி (வயது 27) ஆகிய 2 பேரும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு நகைகளை திருடியது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடு போன நகைகளை மீட்டு, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.