மதுரையை சேர்ந்த தாய்,மகன் விஷம் குடித்து தற்கொலை
தொண்டி அருகே மதுரையை சேர்ந்த தாய் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்களிடம் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டி,
தொண்டி அருகே மதுரையை சேர்ந்த தாய்,மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்களிடம் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணமாக கிடந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வயதான பெண் உள்பட 2 பேர் மயங்கி கிடப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயங்கி கிடந்தவர்களை சோதனையிட்டு உள்ளனர்.
அப்போது வயதான மூதாட்டி இறந்து பிணமாக கிடந்துள்ளார். அருகில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவரை தொண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவரும் சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அதனை தொடர்ந்து இருவரின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடிதம்
பின்னர் இறந்தவர்கள் அருகே கிடந்த பையில் இருந்த ஆதார் அட்டை மற்றும் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகியவற்றை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி போலீஸ் சரகம் வையூர் கிராமத்தை சேர்ந்த சின்ன முனியாண்டி மனைவி மாரியம்மாள் (வயது 65). இவரது மகன் பாக்கியராஜ்(41) என்பது தெரியவந்துள்ளது. 2 பேரும் நேற்று காலை ஊரில் இருந்து கிளம்பியவர்கள் மாலை தொண்டிக்கு வந்துள்ளனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டிய வேலி அடைக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளே சென்று விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
காதல் திருமணம்
பாக்கியராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர். சில வருடங்களில் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் இவரது தந்தை ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டதையடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.
போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், பாக்கியராஜின் சகோதரரின் மனைவி தன்னிடம் பாக்கியராஜ் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று கணவரிடம் பொய்யாக கூறியதால் வீட்டில் உள்ளவர்கள் பாக்கியராஜையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதாகவும், செய்யாத தவறுக்காக பழி சுமத்தி விட்டதாகவும், இதனால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் இவர்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் போலீசார் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.