ஆர்வமுடன் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் நேற்று எழுதினர்.
திண்டுக்கல்:
‘நீட்’ தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு அறிவிப்பு சற்று தாமதமாக வெளியான நிலையில் நேற்று நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 379 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்கு பார்வதீஸ் கல்லூரி, நத்தம் என்.பி.ஆர். கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பார்வதீஸ் கல்லூரியில் 459 பேரும், என்.பி.ஆர். கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் தலா 960 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்வமுடன் வந்தனர்
திண்டுக்கல் பார்வதீஸ் கல்லூரியில் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. காலை 11 மணி முதல் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்தனர். அப்போது ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் மாணவ-மாணவிகளின் உடல்வெப்ப நிலையை சோதனை செய்யும் பணியில் தேர்வுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பின்னரே தேர்வு அறைக்கு செல்ல மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாணவிகள் அணிந்து வந்த ஆபரணங்களை கழற்றும்படி கூறிய அதிகாரிகள் பின்னல் சடை போடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் முழுக்கை சட்டை அணிந்தபடி வந்த மாணவியை தடுத்த அதிகாரிகள் முழுக்கை உடையை வெட்டி அரைக்கை சட்டையாக மாற்றிய பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். அதேபோல் 3 மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வந்தனர். அவர்களில் 2 பேருக்கு உறவினர்கள் தங்களின் அரைக்கை சட்டையை அணிய கொடுத்தனர். ஒரு மாணவர் மட்டும் திண்டுக்கல் ஜவுளிக்கடைக்கு சென்று புதிய அரைக்கை சட்டை வாங்கி அணிந்துகொண்டு தேர்வு எழுத சென்றார்.
99 பேர் வரவில்லை
திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று 423 பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர். 36 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் தாமதமாக வந்து தேர்வு எழுத முடியாமல் சில மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நத்தத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 1,857 பேர் தேர்வு எழுதினர். 63 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 280 பேர் தேர்வு எழுதினர்.