கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 48733 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாமில் 48 ஆயிரத்து 733 பேர் கொரோனா தடு்ப்பூசி செலுத்திக்கொண்டனர்

Update: 2021-09-12 17:02 GMT

கள்ளக்குறிச்சி

சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என மொத்தம் 529 மையங்களில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு நிலையம்

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தீயணைப்பு நிலையம் மற்றும் ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை டீன் உஷா தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, மருத்துவர்கள் பொற்செல்வி, கணேஷ்ராஜா, பிரியா, மாரிமுத்து, அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜாமணி, உதவி திட்ட இயக்குனர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வருவாய் ஆய்வாளர் திருமலை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து சங்கராபுரம் நகரம் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட 44 கிராமங்களில் நடைபெற்ற முகாம்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜெயகாந்தன் உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடு்ப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார்.

48,733 பேருக்கு தடுப்பூசி

நேற்று நடைபெற்ற மெகா கொரோனா தடு்ப்பூசி சிறப்பு முகாமில் 76,374 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 48 ஆயிரத்து 733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசி 41 ஆயிரத்து 892 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 6 ஆயிரத்து 841 பேரும் செலுத்திக்கொண்டனர்.

மேலும் செய்திகள்