ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
திண்டுக்கல்:
மெகா முகாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,225 இடங்களில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாக்குச்சாவடிகள், அங்கன்வாடிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடத்தப்பட்டது. இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தடுப்பூசி போட வந்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவற்றை கோவின் இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் தடுப்பூசி போடப்பட்டது.
54 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
காலையில் முகாம் தொடங்கியதும் தடுப்பூசி போட ஆர்வமுடன் ஏராளமானோர் வந்தனர். நேரம் செல்லச்செல்ல அவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி இல்லை என்ற புகாரும் எழுந்தது. இதையடுத்து அந்த முகாம் நடக்கும் இடங்களுக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 54 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் 34 ஆயிரத்து 99 பேருக்கும், பழனி சுகாதார மாவட்டத்தில் 20 ஆயிரத்து 492 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. ஆய்வு
இதேபோல் பழனி தேரடி பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பார்வையிட்டார். நத்தம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. நத்தம் பேரூராட்சி சார்பில் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் முன்னிலையில் முகாம் நடந்தது. பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி பகுதியில் நடந்த முகாம்களை பேரூராட்சி செயல்அலுவலர் அன்னலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேடசந்தூரில் ராஜகோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க. பிரமுகர்கள் வேடசந்தூர் டி.பெருமாள், பூத்தாம்பட்டி அருண்பாலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாம்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மேலும் நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் முகாம்கள் நடைபெற்றன.
பரிசு
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ் தலைமை தாங்கினார். செட்டிநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையம், கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட 7 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 700 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் முதல் பரிசாக 1 கிராம் தங்கநாணயத்தை சத்யா ஜோதிபாசுக்கும், 2-ம் பரிசு ஆன்ட்ராய்டு செல்போன் யுவராஜூக்கும், 3-ம் பரிசு சாதரண செல்போன் சின்னம்மாளுக்கும் ஊராட்சி தலைவர் வழங்கினார். மேலும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 577 பேருக்கு ரூ.100-க்கான ரீசார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது.
ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பகுதியில் நடந்த முகாமில் தலைவர் லதா செல்வகுமார், ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கினர். இதில் துணைத்தலைவர் சுருளிராஜன், ஊராட்சி செயலர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் நடந்த மெகா தடுப்பூசி முகாம்களை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார். அவருடன் வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.