கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

Update: 2021-09-12 16:46 GMT
கள்ளக்குறிச்சி

75-வது சுதந்திரதின விழா

கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிவு, நேரு யுவகேந்திரா சங்காத்தம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு அவரும், அவரது துணைவியாரும் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம் கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, துருகம் சாலை வழியாக ஏ.கே.டி.பள்ளியில் முடிவடைந்தது. இதில் 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். 

உடற் பயிற்சி

இதுபற்றி கலெக்டர் ஸ்ரீதர் கூறும்போது, நம் நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை சிறப்பிக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நடத்தப்பட்டது. பொது மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஓட்டம், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உடல்பருமன், சோம்பல், மன அழுத்தம், கவலை போன்றவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியமாகும். 

எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி உடற் பயிற்சியில் ஈடுபடுங்கள். மாவட்டத்தில் 75 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நேரு யுவ கேந்திரா இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற முதல் 3 இடங்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களும், மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்றார்.

உறுதிமொழி

முன்னதாக அனைவரும் கலெக்டர் தலைமையில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, நேரு யுகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் நெப்போலியன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நேரு யுகேந்திரா உறுப்பினர்கள், நாட்டு நலத்திட்ட மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்