நீலகிரி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். முன்னதாக அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக ஊட்டி நகராட்சியில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 20 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புறங்களில் 184 மையங்கள், பேரூராட்சி பகுதிகளில் 72 மையங்கள், நகராட்சி பகுதிகளில் 39 மையங்கள் என மொத்தம் 295 மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த முகாமில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களை அங்கன்வாடி பணியாளர்கள் கண்டறிந்து முகாமுக்கு அழைத்து வந்தனர்.
மாவட்டம் முழுவதும் 295 மையங்களில் 1,180 பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து, விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மேலும் முதல் டோஸ் செலுத்தியதற்கான சான்றுகளை காண்பித்து 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. குன்னூர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோத்தகிரி பேரூராட்சியில் காமராஜர் நகர், ஹேப்பிவேலி அங்கன்வாடி மையங்களிலும், டானிங்டன் குழந்தைகள் விடுதி, தவிட்டு மேடு சமுதாய கூடம், கேர்பெட்டா, கெட்டிகம்பை துணை சுகாதார நிலையங்கள், கன்னேரிமுக்கு அரசு பள்ளி, மிஷன் காம்பவுண்டு தனியார் மருத்துவமனை மற்றும் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் ஆகிய 9 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் முகாமை செயல் அலுவலர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியுடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் வெளிமாநில தொழிலாளர்களும் அடங்குவர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 23 ஆயிரத்து 396. இதில் 18 வயதுக்கு மேல் 5 லட்சத்து 17 ஆயிரத்து 576 பேர் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 9 ஆயிரத்து 222 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி(98 சதவீதம்) செலுத்தப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 713 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டு இருக்கிறது.
சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 20 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.