தமிழகத்தில் 7 மாதங்களில் 10¼ கோடி கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி
தமிழகத்தில் 7 மாதங்களில் 10¼ கோடி கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.
குன்னூர்,
நாட்டில் அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களிலும் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. காலநிலையை பொறுத்து ஆண்டுதோறும் தேயிலை உற்பத்தி ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
இந்த ஆண்டு வடமாநிலஙகளிலும், தென்மாநிலங்களிலும் தேயிலைத்தூள் உற்பத்திக்கு ஏற்ற காலநிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேயிலைத்தூள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-
இந்தியாவில் இந்த ஆண்டு தேயிலைத்தூள் உற்பத்திக்கு சாதகமாக காலநிலை நிலவியதால், அதன் உற்பத்தி அதிகரித்து உள்ளது. கடந்த 7 மாதங்கள் முடிவில் இந்தியாவின் தேயிலைத்தூள் உற்பத்தி 62 கோடியே 29 லட்சம் கிலோவாக உள்ளது. இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டு 51 கோடியே 10 லட்சம் கிலோவாக தேயிலைத்தூள் உற்பத்தி இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு 11 கோடியே 19 லட்சம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக உற்பத்தியாகி உள்ளது. இது 22 சதவீத வளர்ச்சி ஆகும்.
வடமாநிலங்களில் கடந்த 7 மாதங்களில் 47 கோடியே 87 லட்சம் கிலோவாக தேயிலைத்தூள் உற்பத்தி இருந்தது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டில் 39 கோடியே 19 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தியானது. இந்த ஆண்டு 8 கோடியே 69 லட்சம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக உற்பத்தியாகி உள்ளது.
தென்மாநிலங்களில் கடந்த 7 மாதங்களில் 14 கோடியே 42 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தியானது. கடந்த ஆண்டு 11 கோடியே 91 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தியாகி இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு 2 கோடியே 50 லட்சம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக உற்பத்தியாகி உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 10 கோடியே 27 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தியானது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 8 கோடியே 11 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு 2 கோடியே 16 லட்சம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக உற்பத்தியாகி உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவில் இந்தியா தேயிலைத்தூள் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.