4 கடைகளில் துணிகர கொள்ளை

மார்த்தாண்டத்தில் 4 கடைகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர், ஒரு ஜோடி செருப்பையும் திருடி சென்றார்.

Update: 2021-09-11 21:16 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டத்தில் 4 கடைகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர், ஒரு ஜோடி செருப்பையும் திருடி சென்றார்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
4 கடைகள்
மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளை திறக்க நேற்று வியாபாரிகள் வந்தனர். அப்போது 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
துணிகர கொள்ளை
அப்போது, ஒரு கொள்ளையன் 4 கடைகளில் கைவரிசை காட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதில், அதிகாலை 1¾ மணிக்கு ஒரு வாலிபர் முதலில் பேரையை சேர்ந்த கிருஷ்ணன்குமார் என்பவரின் சூப்பர் மார்க்கெட் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்தார்.
பின்னர் கொடுங்குளத்தை சேர்ந்த கோபி என்பவரின் கடைக்குள் புகுந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் சபீர் என்பவருடைய பலசரக்கு கடையில் ரூ.10 ஆயிரத்தையும் திருடினார். மேலும் செருப்பு கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி அங்கு இருந்த ஒரு ஜோடி செருப்பை மட்டுமே திருடிய காட்சியும் பதிவாகி உள்ளது. தனக்கு தேவையான ஒரு ஜோடி செருப்பையும் விட்டு வைக்காமல் 4 கடைகளில் மர்ம நபர் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணை
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்