விநாயகர் சதுர்த்தி கொண்டாட பெங்களூருவில் கட்டுப்பாடுகள் தளர்வு
பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநகராட்சி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்து அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு: பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநகராட்சி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்து அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதாவது பெங்களூரு உள்பட நகரங்களில் வார்டுகளில் தலா ஒரு சிலை மட்டுமே வைத்து வழிபட வேண்டும் என்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 5 நாட்கள் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி, விநாயகர் சிலைகளை 4 அடி உயரத்திற்கு மிகாமல் 3 நாட்கள் மட்டுமே வைத்து வழிபட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலாசார நிகழ்ச்சிகள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்பினர் போராட்டம்
பெங்களூரு மாநகராட்சியின் இந்த கட்டுப்பாடுகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியின் முடிவை கண்டித்து நேற்று பல்வேறு இந்து அமைப்புகள் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. அவர்கள் உயரமான விநாயகர் சிலைகளை அங்கு கொண்டு வந்து தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். அந்த நேரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் தலைமை கமிஷனர் கவுரவ் குப்தாவின் காருக்கு குறுக்கே படுத்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் விநாயகர் சிலை வைக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
போலீசார் குவிப்பு
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது இந்து அமைப்பினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "விநாயகர் சதுர்த்தி பண்டிகை எங்களின் உணர்வுப்பூர்வமானது. இதை கொண்டாட தீவிரமான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருப்பது சரியல்ல. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும். உடனடியாக அரசு தனது வழிகாட்டுதலை திருத்தி வெளியிட வேண்டும்" என்றனர்.
புதிய வழிகாட்டுதல் வெளியீடு
இந்து அமைப்புகளின் அழுத்தத்திற்கு பெங்களூரு மாநகராட்சி பணிந்தது. விநாயகர் சிலைகளை வைக்க முன்பு வெளியிட்ட வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு விதித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. வார்டுகளுக்கு ஒரு விநாயகர் சிலை என்ற இருந்த விதிமுறை மாற்றப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
தலைநகர் பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளும் பா.ஜனதா அரசை கண்டித்தும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.