2 வீடுகளில் 24 பவுன் நகை- ரூ.4 லட்சம் திருட்டு

2 வீடுகளில் 24 பவுன் நகை- ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.;

Update: 2021-09-09 20:14 GMT
பெரம்பலூர்:

பட்டறை உரிமையாளர்
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 47). இவர் பாலக்கரையில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கருணாகரன் பட்டறைக்கு சென்று விட்டார். கருணாகரனின் மனைவி பானுமதி நேற்று மதியம் தனது 2 மகன்களுடன் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூரில் உள்ள உறவினர் மகனின் திருமணத்திற்கு சென்று விட்டார்.
பின்னர் அவர் மாலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் முன்வாசல் கதவு கம்பியினால் நெம்பி திறக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அறையில் இருந்த பீரோவும் கம்பியால் நெம்பி திறக்கப்பட்டிருந்தது.
22 பவுன் நகை- ரூ.4 லட்சம் திருட்டு
மேலும் அதில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த 16½ பவுன் நகை என மொத்தம் 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தங்கையின் மகன் திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் செல்வராஜின் 2 மகன்கள் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவும் கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்து 2 பவுன் நகை, ஆயிரத்து 500 ரூபாய், வெள்ளி நாணயங்கள் திருட்டு போயிருந்தன.
இது தொடர்பாகவும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட 2 வீடுகளில் திருடிய மர்மநபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார், மர்மநபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்