கிராம நிர்வாக அலுவலர்களை செல்போனில் மிரட்டிய மர்ம நபர்

கிராம நிர்வாக அலுவலர்களை செல்போனில் மர்ம நபர் மிரட்டினார்.

Update: 2021-09-09 20:14 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களில், சிலரின் செல்போனுக்கு நேற்று மாலையில் இருந்து மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் சில கிராம நிர்வாக அலுவலர்களிடம் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த மர்மநபர், தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிவதாகவும், நீங்கள் அதிகமாக லஞ்சம் பெற்று வருவதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் அந்த மர்மநபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் எங்கிருந்து பேசினார், அவரின் செல்போன் எண்ணின் சிக்னல் எங்கு காட்டுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ேமலும், மர்மநபா் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் டி.பி.யில் தமிழ்நாடு அரசின் முத்திரையிட்ட லோகா உள்ளது. பேசிய நபரின் குரலை கேட்கும் போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்