பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு: ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே துறையில் பணிபுரியும் 12 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.ஆர்.எப்.) சார்பில் போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது.தெற்கு ரெயில்வேயில் எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து கண்ணையா கூறியதாவது:-
பொது சொத்துகளை பணமாக்கும் முயற்சி
ஆரம்பகாலத்தில் அனைத்து பொது சொத்துகளையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சித்தது. எதிர்ப்பு வந்ததால், கார்ப்பரேஷன்களாக்கப்படும் என்று கூறினர். அதற்கும் எதிர்ப்பு எழும்பியதால், தற்போது பொது சொத்துகளை பணமாக்குதல் என்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது.வெறும் ரூ.6 லட்சம் கோடிக்கு 70 ஆண்டுகளாக நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பப்பட்டு உள்ள இந்திய ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன சொத்துகளை 35 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகளுக்கு குத்தகை என்ற பெயரில் தனியாருக்கு தாரைவார்ப்பது நியாயமற்ற செயல்.மத்திய அரசின் இந்த திட்டத்தால், ரெயில் கட்டணங்களும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் விலை, சாலை சுங்க கட்டணங்கள், மின்சார கட்டணங்கள் பலமடங்கு உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர் உடன் இருந்தார்.