சென்னையில் 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி

சென்னையில் வருகிற 12-ந்தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-09 04:18 GMT
43.62 லட்சம் பேர் தடுப்பூசி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையிலும், குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மூலம் இதுவரை 43 லட்சத்து 62 ஆயிரத்து 753 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29 லட்சத்து 89 ஆயிரத்து 64 தடுப்பூசிகளும், 2-ம் தவணையாக 13 லட்சத்து 73 ஆயிரத்து 689 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

1,600 சிறப்பு முகாம்
வருகிற 12-ந்தேதி தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வருகிற 12-ந்தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். இந்த முகாம்களில் 600 டாக்டர்கள், 600 நர்ஸ்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், 2 நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்படும்.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 3 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், விஷூ மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், மாநகர நல அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்