தம்பதி உள்பட 6 பேருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி உள்பட 6 பேருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது;

Update: 2021-09-09 00:52 GMT
கோத்தகிரி

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி உள்பட 6 பேருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது. 

ரூ.33½ லட்சம் மோசடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது 49). இவருடைய மனைவி சுமதி(35). இவர்கள் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் 11 பேரிடம் ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்ததாக தெரிகிறது. 

ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லை.  இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த 11 பேரும், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பாபு, சுமதி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் மோசடி செய்தது உறுதியானது. 

மேலும் அதில் சுமதியின் தந்தை நஞ்சன்(83), தாயார் மாதி(78), சுமதியின் சகோதரர் ரவி(54), அவரது மனைவி சக்தி பிரியா(45), புனிதா(50) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இது தொடர்பான வழக்கு, கோத்தகிரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய நஞ்சன் இறந்து விட்டார். இ்ந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 

அதில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த பாபு உள்பட 6 பேருக்கும் தலா 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 
தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்