கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள மாதா கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று முகாமிட்டு இருக்கிறது.
அந்த கரடி பகல் மற்றும் இரவு நேரங்களில் அருகில் உள்ள தனியார் பள்ளி, தமிழ்நாடு ஓட்டல் விடுதி வளாகம், கடைவீதி சாலை, ஆர்.கே.சி. லைன் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் அங்குள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்து குழந்தைகள் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சாலையோர புதரில் இருந்து வெளியே வந்த கரடி திடீரென குழந்தைகள் உள்பட பொதுமக்களை துரத்த தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு வந்து கரடியை விரட்டியடித்தனர்.