கர்நாடக சட்டசபையில் வருகிற 24-ந்தேதி ஓம்பிர்லா உரையாற்றுகிறார்

கர்நாடக சட்டசபையின் மாண்புகள் குறித்த கூட்டுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று உரையாற்றுவதாக கர்நாடக சபாநாயகர் காகேரி தெரிவித்தார்.

Update: 2021-09-08 21:31 GMT
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் மாண்புகள் குறித்த கூட்டுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று உரையாற்றுவதாக கர்நாடக சபாநாயகர் காகேரி தெரிவித்தார். 

சபாநாயகர் பேட்டி

கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று, மழைக்கால கூட்டத்தொடர் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பார்வையாளர்களுக்கு அனுமதி

கடைசியாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தொடரை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். சபையில் எம்.எல்.ஏ.க்கள் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொள்வது, கேள்வி கேட்ட உறுப்பினர்கள் சபையில் ஆஜராகாமல் இருப்பது, பதிலளிக்க சம்பந்தப்பட்ட மந்திரி சபைக்கு வராமல் இருப்பது போன்ற நிலை ஏற்படக்கூடாது.

தாமதமின்றி உரிய நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில்கள் வழங்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கூட்டத்தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த முறை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

18 மசோதாக்கள்

கொரோனா தடுப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது கட்டாயம். அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்படும். தனிமனித இடைவெளி பின்பற்றப்படும். இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான 24-ந் தேதி, சட்டசபையின் மாண்புகள் குறித்த ஒரு நாள் கூட்டுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தொடரில் 10 சட்ட மசோதாக்கள், 4 முன்னுரிமை பிரச்சினைகள் எடுத்து கொள்ளப்படும். ஏற்கனவே சபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கும் 4 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆகமொத்தம் 18 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களில் ஒருவருக்கு விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபை விதிகளில் திருத்தம் செய்யும் அறிக்கைக்கு இறுதி வடிவம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பங்களா

சபாநாயகர் மற்றும் மேலவை தலைவர் ஆகியோருக்கு அரசு பங்களா ஒதுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதவியின் தகுதி அடிப்படையில் வசதிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.
இவ்வாறு காகேரி கூறினார். இந்த பேட்டியின்போது, சட்டசபை செயலாளர் விசாலாட்சி உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்