காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நட தடை கோரிய மனு தள்ளுபடி
கர்நாடகத்தில் ஈஷா பவுண்டேசன் சார்பில் காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஈஷா பவுண்டேசன் சார்பில் காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காவிரி கூக்குரல்
ஈஷா பவுண்டேசன் காவிரி கூக்குரல் என்ற பெயரில் காவிரி ஆற்றை பாதுகாக்கும் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நடும் பணிகளை அந்த பவுண்டேசன் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஷா பவுண்டேசன் சார்பில் காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நடுவதற்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சர்மா அமர்வு முன்பு நடந்தது. அப்போது, ஈஷா பவுண்டேசனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனித சமூகம்
மேலும் நீதிபதிகள் கூறுகையில், "காவிரி ஆற்று படுகையில் மரக்கன்றுகளை நடுவதில் தவறில்லை. அரசு நிலத்தில் மரக்கன்றுகளை நட்டாலும் அதை தடுப்பது என்பது அழிவுக்கு தான் வழிவகுக்கும். மனித சமூகத்தையும், பூமியையும் காக்க இருப்பது ஒரே வழி காடுகளை வளர்ப்பது தான். இதை ஈஷா பவுண்டேசன் செய்கிறது. இதை பாராட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.