கொரோனா தடுப்பூசியை திருடிய நர்சு பணி இடைநீக்கம்

பெங்களூரு அருகே, அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா தடுப்பூசியை திருடி சென்று, ரூ.300 பெற்று கொண்டு பொதுமக்களுக்கு செலுத்தி வந்த நர்சு பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-09-08 21:30 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே, அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா தடுப்பூசியை திருடி சென்று, ரூ.300 பெற்று கொண்டு பொதுமக்களுக்கு செலுத்தி வந்த நர்சு பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

வீடியோ ஆதாரம் சிக்கியது

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ரேகா என்பவர் நர்சாக வேலை செய்தார். அவர், ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தாமல், அவற்றை திருடி சென்றதாக தெரிகிறது. பின்னர் அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி, பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நர்சு ரேகா தனது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சில வீடியோ காட்சிகளும் பெங்களூரு புறநகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து, ரேகா வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நர்சு பணி இடைநீக்கம்

அதாவது பொதுமக்களுக்கு போடுவதற்காக வரும் கொரோனா தடுப்பூசியை ரேகா திருடி உள்ளார். இதுதவிர பொதுமக்களுக்கு போடும் தடுப்பூசியில் மருந்தின் அளவை சிறிதளவு குறைத்து விட்டு, அதன்மூலம் மீதம் இருக்கும் மருந்தை சேமித்து தினமும் ரேகா வீட்டுக்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட்டு வந்துள்ளார். ஒரு நபரிடம் இருந்து தடுப்பூசி போடுவதற்கு ரூ.300 வசூலித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நர்சு ரேகாவை பணி இடைநீக்கம் செய்து, பெங்களூரு புறநகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சீனிவாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு ரேகாவுக்கு வேறு யாரும் உதவி செய்தாா்களா?, என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ரேகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்