விலைவாசி உயர்வை கண்டித்து மகளிா் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-08 21:30 GMT
பெங்களூரு: விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்

பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிா் காங்கிரஸ் மாநில தலைவி புஷ்பா அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி, முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் காங்கிரசார், சாலையிலேயே அடுப்பில் சமையல் செய்வது போல் நடித்து மத்திய-மாநில அரசுக்கு எதிராக தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். சமையல் கியாஸ் சிலிண்டர் படங்களை அவர்கள் தங்களின் தலையில் சுமந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:-

ரூ.4 லட்சம் கோடி வசூல்

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேட்டால், பாண்டு கடன்களை தீர்க்க வேண்டி இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று மத்திய அரசு சொல்கிறது. ரூ.10 ஆயிரம் கோடி கடனை தீர்க்க ரூ.4 லட்சம் கோடி வசூலித்துள்ளனர். நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.
இந்தியாவிடம் இருந்து எரிபொருளை வாங்கும் பூடான், நேபாள நாடுகள் பெட்ரோல் விலையை ரூ.80-க்கு விற்பனை செய்கின்றன. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் தாண்டிவிட்டது. 

135 கோடி பேருக்கு பா.ஜனதா துரோகம் செய்கிறது. இது தேசத்துரோக கட்சி. நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேரம் வரும்போது, மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

மேலும் செய்திகள்