நடிகர் புல்லட் பிரகாசின் மகன் மீது தாக்குதல்; திருநங்கைகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நடிகர் புல்லட் பிரகாசின் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பெங்களூரு: கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் புல்லட் பிரகாஷ். இவரது மகன் ரக்சிக். இவர், ஹெப்பால் அருகே வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ரக்சிக் வீட்டுக்கு புறப்பட்டார். ஹெப்பால் மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த திருநங்கைகள் சிலர் ரக்சிக்கிடம் பணம் கேட்டதாகவும், அவர் வைத்திருந்த பையை பறிக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் ரக்சிக்கை, திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் இருந்தும் அவர் கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஹெப்பால் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரக்சிக் புகார் அளித்தார்.
போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். ரக்சிக்கிடம், அவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட திருநங்கைகளை வலைவீசி தேடிவருகின்றனர்.